பாலம் அமைக்க வைத்திருந்த 70 கிலோ இரும்பு கம்பிகள் திருட்டு; 3 வாலிபர்கள் கைது


பாலம் அமைக்க வைத்திருந்த 70 கிலோ இரும்பு கம்பிகள் திருட்டு; 3 வாலிபர்கள் கைது
x

மீன்சுருட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்க வைத்திருந்த 70 கிலோ இரும்பு கம்பிகளை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

தேசிய நெடுஞ்சாலை

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தனியார் நிறுவனம் சார்பில் பாலம் அமைக்கும் இடங்களில் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், வீரசோழபுரம் கிராமம் அருகே பாலம் அமைக்கும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை 3 வாலிபர்கள் திருடி ஒரே மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு பகுதியில் ரோந்து பணியில் இருந்த மீன்சுருட்டி பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வீரமணியை கண்டதும் 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். இருப்பினும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

3 பேர் கைது

விசாரணையில் அவர்கள் சுண்டிபள்ளம் காலனி தெருவை சேர்ந்த உதயகுமார் மகன் ரஞ்சித் (வயது 23), மகாலிங்கம் மகன் செட்டி என்கிற மணிவேல் (33), பட்டுசாமி மகன் ஆகாஷ் (21) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைப்பதற்காக வைத்திருந்த இரும்பு கம்பிகளை திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மொத்தம் 70 கிலோ இரும்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story