போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
விழுப்புரம் அருகே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள கோலியனூரை சேர்ந்தவர் அருள் (வயது 52). இவர் வளவனூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் எதிரில் நிறுத்தியிருந்தார். நேற்று காலை அருள் பார்த்தபோது, அங்கு அவரது மோட்டார் சைக்கிள் இல்லை. அந்த இடத்தில் வேறொரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அருள் வீட்டிற்கு அருகில் இருந்த வீட்டில் மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக மோட்டார் சைக்கிளை இயக்கியபோது ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் அந்த மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்து அருள் வீட்டின் எதிரில் நிறுத்திவிட்டு அவரது மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.