வீட்டு வாசலில் பையில் வைத்திருந்த ரூ.2½ லட்சம் திருட்டு
வேதாரண்யம் அருகே வீட்டு வாசலில் பையில் வைத்திருந்த ரூ.2½ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே வீட்டு வாசலில் பையில் வைத்திருந்த ரூ.2½ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வங்கியில் பணம் செலுத்த வந்தார்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா மணக்காட்டை சேர்ந்தவர் நடேசன் (வயது38). மலேசியாவில் வேலை பார்த்து வந்த இவர், தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் நேற்று ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை கரியாபட்டினத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் செலுத்த வந்துள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கு செயல்படாததால் பணத்தை டெபாசிட் செய்ய முடியாமல் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.
பணம் திருட்டு
பின்னர் பணம் வைத்திருந்த பையை தனது வீட்டு வாசலில் வைத்து விட்டு அருகில் வீடு கட்டும் பணியை பார்க்க நடேசன் சென்றுள்ளர். நடேசன் வங்கியில் இருந்து பணத்துடன் செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 4 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் அவரை பின் தொடர்ந்து வந்து வீட்டு வாசலில் இருந்த பணப்பையை திருடி சென்று விட்டனர். பின்னர் நடேசன் வந்து பார்த்த போது பணப்பையை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கரியாப்பட்டினம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
விசாரணை
தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதேபோல் கடந்த வாரம் இதே பாணியில் ரூ.20 ஆயிரம் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.
வேதாரண்யம் சரக பகுதியில் கள்ளிமேடு, தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் வங்கியில் பணம் எடுப்பவர்களை குறிவைத்து பணத்தை சில கும்பல் திருடி செல்கிறது.