ஆசிரியரின் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.5 லட்சம் திருட்டு
சின்னசேலத்தில் ஆசிரியரின் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 5 லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் செந்தமிழ்செல்வன் (வயது 47). நைனார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சின்னசேலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 185 கிராம் தங்கநகைகளை செந்தமிழ்செல்வன் அடமானம் வைத்து ரூ.6 லட்சம் கடன் பெற்றார். அதில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தனது பேண்ட் பையிலும், மீதமுள்ள 4 லட்சத்து 85 ஆயிரம் மற்றும் தான் ஏற்கனவே கொண்டு வந்த ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை சேர்த்து ஒரு பையில் வைத்துக்கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்தார்.
பின்னர் அந்த பணப்பையை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு சின்னசேலம் ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள தனது தந்தையின் பைனான்ஸ் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அலுவலகம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, தனது தந்தையை பார்க்க உள்ளே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பையை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.
வலைவீச்சு
இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், மணிகண்டன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.