ஆலயம், வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கள்ளக்காதலியுடன் கைது
குளச்சல் பகுதியில் ஆலயம், வீடுகளில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 45 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
குளச்சல்,
குளச்சல் பகுதியில் ஆலயம், வீடுகளில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 45 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
ஆலயத்தில் நகை கொள்ளை
குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி நள்ளிரவு மாதா சொரூபத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளை போனது. இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலயத்தில் கொள்ளையடித்த நபர்களை தேடி வந்தனர். இதற்காக போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஆலயத்தின் வடக்கு ஜன்னல் வழியாக ஒரு பெண் உள்ளே நுழையும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சியின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தேடினர்.
இந்த நிலையில் நேற்று குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் வெட்டுமடை பகுதியில் சென்ற போது, ஒரு ஆணும் பெண்ணும் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
கள்ளக்காதல் ஜோடி
போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த ஆண் கருங்கல் அருகே உள்ள கப்பியறையை சேர்ந்த சாபுமோன் (வயது37) என்பதும் அவருடன் வந்தவர் அவரது கள்ளக்காதலி அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த நூர்ஜகான் (43) என்பதும் தெரிய வந்தது. பட்டதாரியான சாபுமோன் தற்போது நெல்லை மாவட்டம் காவல்கிணறு விலக்கு பகுதியில் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தலத்தில் கொள்ளையடித்தது தெரிய வந்தது.
45 பவுன் நகைகள் மீட்பு
சாபுமோன் குளச்சல் பகுதியில் 4 இடங்கள், இரணியல் போலீஸ் சரகத்தில் 7 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 17 இடங்களில் ஆலயம், வீடுகளில் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சாபுமோன் மற்றும் நூர்ஜகான் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 பவுன் நகைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.