தோடர் இன மக்கள் மொர்பர்த் பண்டிகை கொண்டாட்டம்


தோடர் இன மக்கள் மொர்பர்த் பண்டிகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி முத்தநாடுமந்தில் தோடர் இன மக்கள் மொர்பர்த் பண்டிகையை கொண்டாடினார்கள்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி முத்தநாடுமந்தில் தோடர் இன மக்கள் மொர்பர்த் பண்டிகையை கொண்டாடினார்கள்.

தோடர் இன மக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. தற்போது காலம் மாறினாலும், அவர்கள் தங்களது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களை தவறாமல் கடைபிடித்து வருகின்றனர். நீலகிரியில் தோடர் இன மக்களின் தலைமை இடமாக முத்தநாடுமந்து திகழ்கிறது.

முத்தநாடுமந்தில் மாவட்டம் முழுவதும் உள்ள மந்துகளில் வசிக்கும் தோடர் இன மக்கள் ஒன்று கூடி ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதி வாரத்தில் மொர்பர்த் என்று அழைக்கப்படும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஊட்டி அருகே உள்ள முத்தநாடுமந்தில் மொர்பர்த் பண்டிகையை தோடர் இன மக்கள் நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். பண்டிகையையொட்டி தோடர் இன மக்கள் விரதம் இருந்து, மூன்போ என்ற கோவிலில் வழிபட்டனர்.

பாரம்பரிய உடை

அவர்கள் சந்தன பொட்டு வைத்தும், தங்களது பாரம்பரிய உடையணிந்தும் இருந்தனர். பின்னர் தோடர் இன மக்கள் மூன்போ கோவிலில் இருந்து ஊர்வலமாக ஒர்யள்வோ கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் வேண்டிக்கொள்ளும் போது, தரையை நோக்கி குனிந்து வணங்கினர். இதையடுத்து தோடர் இன மக்கள் மீண்டும் மூன்போ கோவிலுக்கு சென்று வழிபட்டனர். தொடர்ந்து அவர்கள் தங்களது காணிக்கை மற்றும் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

அதன் பின்னர் மூன்போ கோவிலின் முன்பகுதியில் சுற்றி நின்றபடி தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். இந்த பண்டிகையில் ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு கோவிலுக்கு சென்றனர். அதனை தொடர்ந்து தோடர் இன மக்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடந்தது.

75 கிலோ எடை கல்

சுமார் 75 கிலோ எடை கொண்ட கல் மீது வெண்ணெய் பூசப்பட்டு இருந்தது. இந்த கல்லை தோடர் இன இளைஞர்கள் தூக்கி, அதனை தோளில் வைத்து முதுகுக்கு பின்புறமாக கீழே போட்டு அசத்தினார்கள். இதுகுறித்து தோடர் இன மக்கள் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் இன மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மொர்பர்த் பண்டிகையை கொண்டாடுவோம். இந்த பண்டிகையில், உலக மக்கள் நலமாக இருக்க வேண்டும், நல்ல மழை பெய்து விளைச்சல் அதிகமாக வேண்டும், தோடர் இன மக்களின் வளர்ப்பு எருமைகள் நன்றாக இருக்க வேண்டியும் வழிபட்டோம் என்றனர்.


Next Story