லாரி சக்கரத்தில் சிக்கி வியாபாரி பலி
வேலூரில் லாரி சக்கரத்தில் சிக்கி வியாபாரி பலியானார்.
வேலூரை அடுத்த அம்முண்டி மோட்டூரை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 47). இவர் மோட்டார் சைக்கிளில் பாத்திரங்கள் வியாபாரம் செய்து வந்தார். வேணுகோபால் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பாத்திரங்கள் வியாபாரம் செய்து விட்டு நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். சேண்பாக்கம் பகுதியில் சென்னை-பெங்களூரு அணுகுசாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த வேணுகோபால் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு இறங்கி தப்பியோடினார்.
தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.