சீருடை வழங்கப்படாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்- மாற்று உடைகள் அணிந்து பஸ்களை இயக்கினர்
சீருடை வழங்கப்படாததால் மாற்று உடைகளை அணிந்து வந்து போக்குவரத்து தொழிலாளர்கள் மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீருடை வழங்கப்படாததால் மாற்று உடைகளை அணிந்து வந்து போக்குவரத்து தொழிலாளர்கள் மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீருடை வழங்கப்படவில்லை
போக்குவரத்து நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடைபெற்ற ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 2 சீருடைகள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை. இதன் அடிப்படையில் பலகட்ட போராட்டங்களை போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சீருடை வழங்கக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் சார்பில் போக்குவரத்து நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1.11.2022 அன்று போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு சீருடை வழங்கக்கோரி நினைவூட்டல் கடிதமும் வழங்கப்பட்டது.
போராட்டம்
அப்போதே 1.12.2022 முதல் நாங்கள் சீருடை இல்லாமல் மாற்று உடை அணிந்து பணி செய்யப் போவதாக கடிதம் கொடுத்துள்ளோம். அதனைத் தொடர்ந்து போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்று உடை அணிந்து பஸ்களை இயக்குவது என்று முடிவு செய்துள்ளதாக அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கனகசுந்தர் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று கோரிக்கையை வலியுறுத்தி சீருடை அணியாமல் மாற்று உடையில் பணிக்கு வந்த தொழிலாளர்கள் சீருடை வழங்க கோரி மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சீருடை அணியாமல் மாற்று உடையுடன் பஸ்களை இயக்கினர்.