2 வீடுகள் மீது மரம் விழுந்தது
ஊட்டியில் தொடர் மழை காரணமாக, 2 வீடுகள் மீது மரம் விழுந்தது.
ஊட்டி,
ஊட்டியில் தொடர் மழை காரணமாக, 2 வீடுகள் மீது மரம் விழுந்தது.
மரம் விழுந்தது
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகின்றது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஊட்டி டம்ளர்முடக்கு பகுதியில் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரம் ஒன்று 2 வீடுகள் மீது விழுந்தது.
இதனால் வீடுகளின் மேற்கூரை சேதமடைந்தது. மேலும் வீடுகளில் இருந்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின்வாள் மூலம் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் புதுமந்து சாலையின் குறுக்கே 2 மரங்கள் விழுந்தன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். அப்பகுதியில் அபாயகரமான மரங்கள் அதிகமாக உள்ளதால், மழைக்காலத்தில் எந்நேரத்தில் வேண்டுமானாலும் விழக்கூடும். எனவே, அந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் அவதி அடைந்தனர். மேலும் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். பஸ் நிலையங்களில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் அவதி அடைந்தனர். மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.