உளுந்தூர்பேட்டை அருகேடயர் வெடித்து கவிழ்ந்த லாரிபருப்பு மூட்டைகள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்து லாரி கவிழ்ந்தது, இதில் லாரியில் இருந்த பருப்பு மூட்டைகள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
விழுப்புரத்தில் இருந்து நேற்று காலை 130 துவரம் பருப்பு மூட்டைகளுடன் லாரி ஒன்று கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சென்னையை சேர்ந்த பால்ராஜ் மகன் மீனா ராஜ் (வயது 40) என்பவர் ஓட்டினார்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுத்தனூர் என்கிற இடத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அந்த லாரியின் டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மீனாராஜ் காயமின்றி தப்பினார். மேலும், 130 துவரம் பருப்பு மூட்டைகளும் சாலையில் ஆங்காங்கே விழுந்தன. இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் விரைந்து வந்து, பொதுமக்கள் உதவியுடன் பருப்பு மூட்டைகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.