தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்


தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்
x

தேசிய பஞ்சாலைகளை திறக்கக்கோரி தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

கோயம்புத்தூர்

கோவை, ஜூன்.15-

தேசிய பஞ்சாலைகளை திறக்கக்கோரி தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

தேசிய பஞ்சாலைகள் மூடல்

கோவை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 7 தேசிய பஞ்சாலைகள் (என்.டி.சி. மில்கள்) உள்ளன. இதில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். தினமும் 40 ஆயிரம் கிலோ நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. கொரோனா பரவலையொட்டி 2020-ம் ஆண்டு தேசிய பஞ்சாலைகள் மூடப்பட்டன. அப்போது, ஒரு மாதம் மட்டும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த பஞ்சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ்கோயல், செயலாளர் உபேந்திரசிங் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தியும் இன்னும் தேசிய பஞ்சாலைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

கோவையில் உண்ணாவிரதம்

இந்த நிலையில் நேற்று கோவை சிவானந்தாகாலனியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், தேசிய பஞ்சாலைகளை திறக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பி.ஆர்.நடராஜன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் ஆகியோர் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.

இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜாமணி (எச்.எம்.எஸ்.), மு.தியாகராஜன் (எம்.எல்.எப்.), பத்மநாபன் (சி.ஐ.டி.யு.), கோபால் (ஏ.டி.பி.) முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் (ஏ.ஐ.டி.யு.சி.), பாலசுப்பிரமணியம் (ஐ.என்.டி.யு.சி.) ரங்கசாமி (என்.டி.எல்.எப்.) உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர் போராட்டம்

இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

தேசிய பஞ்சாலைகள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இந்த மில்களுக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி நிலங்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1974-ம் ஆண்டு தொழிலாளர் சட்டம் 11 ஏ பிரிவின்படி, இந்த சொத்துக்களை விற்றால் அதே நிர்வாகத்துக்கு செலவழிக்க வேண்டும் என்று உள்ளது. இதன்படி ரூ.2 ஆயிரம் கோடியில், ரூ.1000 கோடியையாவது தேசிய பஞ்சாலைகளை நவீனப்படுத்த மத்திய பா.ஜனதா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதுவுமே செய்யாமல் வாய்மூடி மவுனமாக இருப்பதுடன், பஞ்சாலைகளும் மூடப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது. அடுத்தகட்டமாக தொடர் போராட்டங்களை நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story