திண்டிவனம் அருகேவேன் பள்ளத்தில் பாய்ந்தது; அய்யப்ப பக்தர்கள் 12 பேர் படுகாயம்
திண்டிவனம் அருகே வேன் பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்த விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 12 பேர் பலத்த காயமடைந்தனர்.
திண்டிவனம்,
வேன் பள்ளத்தில் பாய்ந்தது
சென்னை குன்றத்தூர், குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 20 பேர் ஒரு வேனில் குரோம்பேட்டையில் இருந்து நேற்று அதிகாலை சபரிமலை நோக்கி புறப்பட்டனர். வேனை சென்னை பம்மல் ஆண்டாள் குப்பம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் (வயது 47) என்பவர் ஓட்டினார்.
அந்த வேன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புறவழிச்சாலை அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடியவாறு சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
12 பேர் படுகாயம்
இந்த விபத்தில் வேன் கண்ணாடி உடைந்ததில், டிரைவர் இருக்கை அருகே அமர்ந்திருந்த, டிரைவரின் மகள் ரஞ்சனா(7) என்ற சிறுமி வேனில் இருந்து தூக்கி வெளியே வீசப்பட்டு, படுகாயமடைந்தாள். மேலும் வேனில் பயணம் செய்த பக்தர்கள் கமல் ராஜ் (34), பிரசன்னா குமார் (40), தேவராஜ் (60), ரங்கநாதன் (51), குமார் (62), ஏழுமலை (44), கோபாலகிருஷ்ணன் (54) கண்ணன் (54) சேக்கப்பன் (29), விஷ்ணு பிரசாத் (14), சத்தியா (13) ஆகியோரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிய ரஞ்சனா உள்ளிட்ட 12 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.