வண்ணார் சமூகத்தை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக்கோரி வழக்கு
வண்ணார் சமூகத்தை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக்கோரி வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்த இசக்கிமுத்து, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழ்நாடு முழுவதும் வண்ணார் சமூகத்தினர் சுமார் 40 லட்சம் பேர் உள்ளனர். ஆனால் இந்த சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் வண்ணார் சமூகத்தை பட்டியல் வகுப்பில் (எஸ்.சி.,) சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டம் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளது. இதனால் பல்வேறு வாய்ப்புகள் பறிபோகிறது. எனவே தமிழ்நாடு முழுவதும் வண்ணார் சமூகத்தை எஸ்.சி., பிரிவில் சேர்க்குமாறும், வண்ணார்-சலவை தொழிலாளர் என குறிப்பிடுவதை நீக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய அரசின் சட்டத்துறை இணைச் செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.