மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலியானார்.
மாயனூர் பகுதியை சேர்ந்தவர்கள் பாலகுமார் (வயது 44), கிருஷ்ணமூர்த்தி (53). இவர்கள் 2 பேரும் நேற்று மாயனூரில் இருந்து கரூர் நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கிருஷ்ணமூர்த்தி ஓட்டினார். பாலகுமார் பின்னால் அமர்ந்திருந்தார். திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வளையல்காரன்புதூர் பிரிவு பகுதியில் சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிருஷ்ணமூர்த்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பாலகுமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.