இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் படுகாயம் அடைந்தவர் பலி


இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் படுகாயம் அடைந்தவர் பலி
x

திருவண்ணாமலையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இருதரப்பினர் மோதல்

திருவண்ணாமலை ஜன்னத் நகரை சேர்ந்த அப்துல்நிசார் (வயது 26). இதே பகுதியை சேர்ந்தவர் தர்வீஸ் (27). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 22-ந் தேதி ஜன்னத் நகர் ரெயில்வே கேட் அருகில் அப்துல்நிசார் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது தர்வீஸ் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது தர்வீஸ், அவரது தாய் அமீனா (50), நண்பர் தனசேகர்சூரியா (27), உறவினர் முபாரக் (19) ஆகியோர் சேர்ந்து அப்துல்நிசாரை தாக்கியுள்ளனர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அப்துல்நிசாரின் தந்தை அப்துல்காதர் (55) மற்றும் உறவினர்கள் சம்பவயிடத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டவர்களை தடுத்தனர். அப்போது தர்வீஸ் தரப்பினர் அவர்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

அதேபோல் அன்று ஜன்னத் நகர் மசூதி அருகில் தர்வீஸ் அவரது நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அங்கு வந்த அப்துல்நிசார் மற்றும் தந்தை, உறவினர்கள் என 4 பேர் சேர்ந்து தர்வீஸை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

தாய் உள்பட 3 பேர் கைது

இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து அப்துல்நிசாரும், தர்வீசும் தனித்தனியாக திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் அப்துல் நிசாரின் தந்தை அப்துல்காதருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அப்துல்காதர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்வீஸ், அவரது தாய் அமீனா, நண்பர் தனசேகர்சூர்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய முபாரக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story