மேம்பாலம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்
கம்மாபுரம் அருகே தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக கூறி மேம்பாலம் அமைக்கும் பணியை கிராமமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கம்மாபுரம்,
போராட்டம்
கம்மாபுரம் அருகே உள்ள கற்றாழை, மும்முடிசோழகன், கரைமேடு, ஊ.ஆதனூர் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் புதிய பரவனாற்றை கடந்து செல்வதற்கு வசதியாக ஆற்றின் குறுக்கே என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தரமற்ற முறையில் பாலம் அமைக்கப்படுவதாக கூறி நேற்று மேற்படி 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கே திரண்டு வந்து பாலம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்து சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையில் போலீசார் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பாலத்தில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட கைப்பிடி சுவரை அகற்றிவிட்டு நல்ல தரமான முறையில் சுவர் அமைக்க வேண்டும், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுதால் அங்கு அடிக்கடி விபத்து நிகழ்வதால் மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
பரபரப்பு
இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து பாலத்தின் கைப்பிடி சுவரை என்.எல்.சி. ஊழியர்கள் அகற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.