விபத்தில் பெண் பலியான சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்


விபத்தில் பெண் பலியான சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x

கும்மிடிப்பூண்டி அருகே மினி லாரி மோதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்

விபத்தில் பலி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி விஜயா (வயது 52). இவர் நேற்று முன்தினம் மாலை கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து தினக்கூலி வேலை முடித்து விட்டு தனது மகன் வேலு (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அதே திசையில் வந்த மினி லாரி ஒன்று மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜயா பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வேலு படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

போலீஸ்நிலையம் முற்றுகை

இந்த விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை கைது செய்யவில்லை என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கிடைக்க வழிவகை செய்யவில்லை என்றும் வலியுறுத்தி சிறுபுழல்பேட்டை கிராம மக்கள் நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கிரியா சக்தி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் சமாதானம் ஆன கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story