ஒப்பந்ததாரர்கள் செய்யும் வேலைகளை கிராம மக்கள் ஆய்வு செய்ய வேண்டும்-நவாஸ்கனி எம்.பி. பேச்சு


ஒப்பந்ததாரர்கள் செய்யும் வேலைகளை கிராம மக்கள் ஆய்வு செய்ய வேண்டும்-நவாஸ்கனி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தரமான கட்டிடங்கள் அமைய ஒப்பந்ததாரர்கள் செய்யும் வேலைகளை கிராம மக்கள் ஆய்வு செய்ய வேண்டும் என நவாஸ்கனி எம்.பி. கூறினார்

ராமநாதபுரம்

சாயல்குடி,

தரமான கட்டிடங்கள் அமைய ஒப்பந்ததாரர்கள் செய்யும் வேலைகளை கிராம மக்கள் ஆய்வு செய்ய வேண்டும் என நவாஸ்கனி எம்.பி. கூறினார்.

கிளை அஞ்சலகம் திறப்பு

சாயல்குடி அருகே கீழமுந்தல் கிராமத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பில் ராமநாதபுரம் கோட்டத்தின் 248-வது கிளை அஞ்சலகம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாலிநோக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பீர்முகமது தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுசாமி,தென்மண்டல அஞ்சல் துறை இயக்குனர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் வாலிநோக்கம் காதர் சுல்தான் அலி, கீழமுந்தல் வசந்தா கதிரேசன், கிராம தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சலக கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அஞ்சலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்த நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ேளாம். ஆனால் தற்போது அதற்கான நிதி மிகவும் குறைக்கப்பட்டுள்ளதால் 100 நாள் வேலை கொடுக்கும் நிலை மாறி தற்போது ஆண்டுக்கு 20 நாட்கள் மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்க நிலை உள்ளது.ஆகையால் நிதி குறைப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்துள்ளோம்.

கிராம மக்கள் கண்காணிக்க வேண்டும்

பக்கத்து மாநிலமான கேரளாவில் அரசு கட்டிடங்கள் தரமாக அமைவதற்கு அங்குள்ள பகுதி மக்கள் விழிப்புணர்வுடன் ஒப்பந்ததாரர்களை முறையாக பணிகளை செய்ய வலியுறுத்தி வருகின்றனர். அதனால் அங்கு கட்டிடங்கள் தரமாக கட்டப்படுகின்றன.

அதுபோல தமிழக அரசும் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு அதிக நிதிகளை ஒதுக்குகிறது. கட்டிடங்கள் வேலை செய்யும் ஒப்பந்ததாரர்களை கிராம மக்கள் அவர்கள் பணிகள் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒழுங்காக வேலை செய்கிறார்களா? என்பதை கண்காணித்தால் மட்டுமே கட்டிடங்கள் நல்ல முறையாக அமையப்பெறும். இல்லையென்றால் அரசு மக்களுக்காக நிதி ஒதுக்கியும் பயனற்று உள்ளதாகிவிடும். கீழமுந்தல் கிராமத்தில் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு ரூ.8½ லட்சம் நிதி எனது எம்.பி. நிதியிலிருந்து ஒதுக்கி தரப்பட்டுள்ளது. இங்குள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் சீரமைக்க பள்ளி கல்வித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜய கோமதி, அஞ்சல் துறை வணிக மேலாளர் பாலு, இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் முதுநிலை மேலாளர் கார்த்திகேயன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் முனியசாமி, நம்பு ராஜன், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள் முத்து முனியன், உமைய பார்வதி, உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் அஞ்சல்துறை ஆய்வாளர் மிக்கா நாயகம் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story