சேத்தியாத்தோப்பு அருகே நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் திடீர் முற்றுகை


சேத்தியாத்தோப்பு அருகே    நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் திடீர் முற்றுகை
x

சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி.க்கு நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் திடீர் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,


சுரங்க விரிவாக்க பணி

நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தினர் நிலக்கரி எடுப்பதற்காக 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக பல்வேறு கிராமங்களை கையகப்படுத்தி வருகின்றனர். அதேபோல் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை ஊராட்சி கரிவெட்டி கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்தி அளவீடு செய்வதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் தலைமையில், சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் மற்றும் போலீசார், அதிகாரிகள் கரி வெட்டி கிராமத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் அதிகாரிகளை வழிமறித்து முற்றுகையிட்டனர். அப்போது குடும்ப அட்டையில் உள்ள ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே நிலத்தை அளவீடு செய்ய அனுமதிப்போம் என தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

அதிகாரிகளை முற்றுகை

பின்னர் நேற்று காலை மீண்டும் நிலத்தை அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் கரிவெட்டி கிராமத்துக்கு வந்தனர். அப்போது வழியில் அவர்களை கிராம மக்கள் மற்றும் பா.ம.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கம்யூனிஸ்டு கட்சி, வி.சி.க. நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் நிலத்தை அளவீடு செய்வதற்காக என்.எல்.சி. நிர்வாகமும், தமிழக அரசும் தீவிர முயற்சி செய்து வருவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இதுபற்றிய தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் வீட்டில் ஒருவருக்கு வேலை என்ற பேச்சை முடிவெடுத்த பின்னரே நிலத்தை அளவீடு செய்ய அனுமதிப்போம் என தெரிவித்தனர்.

முத்தரப்பு கூட்டம்

இதைத் தொடர்ந்து சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயிகள், கிராமமக்கள், என்.எல்.சி. அதிகாரிகள் ஆகியோரை கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கிராமமக்கள் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கரி வெட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story