சுவர் இடிந்து விழுந்து பெண் பலி


சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூரில் பெய்த பலத்த மழையால் சுவர் இடிந்து பெண் ஒருவா் பரிதாபமாக இறந்தார். புதுப்பேட்டையில் மின்னல் தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்தார்.

கடலூர்

ராமநத்தம்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நேற்று மாலை ராமநத்தம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.

இந்த நிலையில் வேப்பூர் தெற்கு தெருவை சேர்ந்த மெய்யப்பன் என்பவரின் கூரை வீ்ட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவரது மனைவி ஜோதி(48) இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

பெண் சாவு

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மெய்யப்பன் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளை அகற்றி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜோதியை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்னல் தாக்கி படுகாயம்

பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியில் நேற்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் பொன்னங்குப்பம் கிராமத்தில் ஆண்கள், பெண்கள் என 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரெ மின்னல் தாக்கியதில் அருகில் நின்ற தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.

மேலும் அருகில் நின்று கொண்டிருந்த விவசாயி மகாதேவன்(50) படுகாயமடைந்தார். உடனே அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மகாதேவனை மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


Next Story