வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 மூதாட்டிகள் பலி


வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 மூதாட்டிகள் பலி
x
தினத்தந்தி 18 Oct 2022 1:15 AM IST (Updated: 18 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 மூதாட்டிகள் பலியானார்கள்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 மூதாட்டிகள் பலியானார்கள்.

தொடர் மழை

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும், இரவில் மழை வந்து விடுகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன.

பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமம் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் பொன்னான். இருவடைய மனைவி சீரங்காயி (வயது 80). சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னான் இறந்து விட்டார். குழந்தைகள் இல்லாததால் சீரங்காயி தனிமையில் வசித்து வந்தார்.

மூதாட்டி பலி

இந்த நிலையில் பனமரத்துப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று அதிகாலை மூதாட்டி சீரங்காயி குடிசை வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சீரங்காயி படுத்திருந்த கட்டில் மீது சுவர் விழுந்ததில் அவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளை அகற்றி இறந்து போன சீரங்காயியின் உடலை மீட்டனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த பனமரத்துப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரங்காயியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்தினி, தாசில்தார் செம்மலை, பனமரத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் ராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

எடப்பாடி

எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட, மேட்டு தெருவை சேர்ந்தவர் ராணி (65), இவரது கணவர் குமார் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் ராணி அங்குள்ள பெரியார் படிப்பகம் அருகே உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் எடப்பாடி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக நேற்று அதிகாலை ராணி வசித்து வந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ராணி சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எடப்பாடி நகராட்சி தலைவர் டி.எஸ்.எம்.பாஷா இறந்தவரின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சேலம் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து 2 மூதாட்டிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story