ஏரிகளின் தண்ணீர் இருப்பு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்


ஏரிகளின் தண்ணீர் இருப்பு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் ஏரிகளில் தண்ணீர் இருப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 கிராம ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது,

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டதில் வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீடு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைவாகவும், பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முடிக்க வேண்டும்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு, பொதுமக்களின் பங்களிப்பு தொகைகள் பெறுவதில் நிலுவையையை உடனடியாக வசூலிக்க வேண்டும்.

நம்ம ஊரு சூப்பர் திட்டத்தில் ஏரி, குளம், குட்டை இவைகளை தூய்மைப்படுத்தவும், சுற்றுப்புறத்தை தூய்மை படுத்தவும், குப்பைகளை அகற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகளவிலான ஊராட்சிகளில் இப்பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆகவே வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்களை இணைத்து இப்பணியை திறம்பட மேற்கொள்ள வேண்டும்.

தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காலத்தில் 288 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 1349 குளம், குட்டைகள் மற்றும் 188 கிராம சிறிய எரிகள் இவைகளில் தண்ணீர் இருப்பு மற்றும் கரைகள் பலம் குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும்.

அடைப்புகளை அகற்ற வேண்டும்

பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பொன்னையாற்றிலிருந்தும், பாலாற்றிலிருந்தும் வரும் தண்ணீர் ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. ஆகவே தற்போது வரை நிரம்பிய ஏரிகளை ஆய்வு செய்து, அதன் கரைகள் தன்மை, நீர் வரும் வழித்தடம் மற்றும் நீர் வெளியேறும் வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை அகற்றிட வேண்டும். கரையின் பலத்தை கட்டாயமாக ஆய்வு செய்து, பிரச்சினைகள் இருந்தால் அதை முன்கூட்டியே சரி செய்திட வேண்டும்.

பருவமழை காலங்களில் அலுவலர்கள் அந்தந்த தலைமையிட அலுவலகத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகளில் பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகள், தேவைப்படும் முன்னெச்சரிக்கை பாதுகாப்புகள் குறித்து உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.லோகநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story