பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40 அடியை நெருங்கியது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை, பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40 அடியை நெருங்கியது
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்தாலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழையாகவும் பெய்கிறது. மேலும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அணைகள் மெல்ல மெல்ல நிரம்பி வருகின்றன. அந்த வகையில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40 அடியை நெருங்கியுள்ளது. அதாவது நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 39.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 254 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே போல பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 41.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 95 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து நாகர்கோவில் மாநகரின் குடிநீர் தேவைக்காக 50 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 20 கனஅடி தண்ணீரும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 35 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் பேச்சிப்பாறை மற்றும் சிற்றார் அணை பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பேச்சிப்பாறையில் 3.6 மில்லி மீட்டரும், சிற்றார் 2 அணை பகுதியில் 11.6 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.