முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 14.30 அடியாக சரிவு
முக்கடல் அணை நீர்மட்டம் கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்டது போல மைனஸ் 14.30 அடியாக சரிந்துள்ளது.
நாகர்கோவில்:
முக்கடல் அணை நீர்மட்டம் கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்டது போல மைனஸ் 14.30 அடியாக சரிந்துள்ளது.
முக்கடல் அணை
நாகர்கோவில் மாநகராட்சிக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அணையில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரானது கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீராக சப்ளை செய்யப்படுகிறது. முக்கடல் அணை 25 கொள்ளளவு கொண்டது. மேலும் மைனஸ் 25 அடியும் தண்ணீர் இருக்கும். இதில் மைனஸ் 10 அடிக்கு சென்றுவிட்டால் அணையில் இருந்து தண்ணீர் எடுப்பது சிரமமாகிவிடும்.
இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்யாததால் முக்கடல் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் மைனஸ் 14.30 அடியாக சரிந்துள்ளது. இதன் காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து அனந்தனார் கால்வாயில் விடப்படும் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால் பேச்சிப்பாறை அணையிலும் தண்ணீர் வெகுவாக குறைந்து வருகிறது.
குடிநீர் பிரச்சினை
இதை வைத்து பார்க்கும் போது கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்டது போன்ற குடிநீர் பிரச்சினை தற்போது ஏற்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஏன் எனில் கடந்த 2017-ம் ஆண்டு மழை பொய்ததால் கடும் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பஞ்சம் உருவானது. இந்த நிலையில் தற்போதும் மழை இல்லாததால் அதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சிக்கு கடந்த 2017-ம் ஆண்டு குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. அதே நிலை தற்போது உருவாகி இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 210 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. ஆழ்துளை கிணறுகள் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோக லாரிகள் மூலமாகவும் தண்ணீர் வினியோகம் நடக்கிறது. வழக்கமாக 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக 16 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு முக்கடல் அணையில் பிளஸ் 7 அடி தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது தண்ணீர் மைனஸ் 14.30 அடியாக சரிந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.