தக்கலை அருகே பயங்கரம் :காதல் மனைவி அரிவாளால் வெட்டிக்கொலைவிஷம் குடித்து கணவர் தற்கொலை முயற்சி
தக்கலை அருகே காதல் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
தக்கலை:
தக்கலை அருகே காதல் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
காதல் திருமணம்
அழகியமண்டபம் அருகே உள்ள தச்சன்கோடு பகுதியை சேர்ந்தவர் எபனேசர் (வயது 35). டெம்போ டிரைவர். இவருடைய மனைவி ஜெப பிரின்ஷா (31). இவர்களுக்கு ஜெபசேனன் (14), ஜெபஆகாஷ் (13) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு எபனேசரும், ஜெப பிரின்ஷாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
பெற்றோர் வீட்டில் வசித்தனர்
இதனால் தொடக்கத்தில் திருமணத்தை ஜெப பிரின்ஷாவின் தந்தை ஜெபசிங் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் மகளுக்கு குழந்தைகள் பிறந்த பிறகு மனம்மாறி ஏற்றுக்கொண்டார். ஜெபசிங்கின் சொந்த ஊர் மூலச்சல் பன்றி வெட்டான் பாறைவிளை ஆகும். அதை தொடர்ந்து ஜெப பிரின்ஷா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து சென்றார்.
ஒரு கட்டத்தில் எபனேசரின் வீடு சரியில்லை என்பதால் புதிய வீடு கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஜெப பிரின்ஷா தனது கணவர், குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
மனைவி மீது வெறுப்பு
இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜெப பிரின்ஷா திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பியூட்டிசன் படிப்பதற்காக சேர்ந்துள்ளார். இதற்காக அவர் தினமும் பஸ்சில் சென்று வந்தார். இவர் அங்கு படிக்க சென்ற பிறகு அவரது நடை, உடை, பாவனையில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த மாற்றம் எபனேசருக்கு பிடிக்கவில்லை.
இதுபற்றி கேட்டதால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இனி நீ படிக்க போகக்கூடாது என கூறியுள்ளார். ஆனால் கணவரின் பேச்சையும் மீறி அவர் படிக்க சென்றார். தன்னை மனைவி உதாசீனப்படுத்தி விட்டாளே என மனதுக்குள் நினைத்த எபனேசருக்கு, ஜெப பிரின்ஷா மீது ஆத்திரம் ஏற்பட்டது.
ஒரு நேரத்தில் எந்த அளவுக்கு காதல் இருந்ததோ, அந்த அளவுக்கு ஜெப பிரின்ஷா மீது எபனேசருக்கு வெறுப்பு உருவானது. ஒரு கட்டத்தில் இந்த வெறுப்பு மனைவியை கொன்று விடலாமா? என்ற கொடூர எண்ணத்தையும் அவருக்கு ஏற்படுத்தியது.
கொலை செய்ய திட்டம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெபசிங்கின் மகனும், ஜெப பிரின்ஷாவின் தம்பியுமான ஜெப பிரின்சுக்கு திருமண பேச்சுவார்த்தை வீட்டில் வைத்து நடந்துள்ளது. அது முடிந்ததும் துணி எடுப்பதற்காக கடைக்கு சென்று விட்டு அனைவரும் இரவு வீட்டிற்கு திரும்பினர்.
இந்த நிகழ்ச்சியின் போது ஜெப பிரின்ஷா அதிக மேக்கப்புடன் உடையணிந்து அனைவருடன் சிரித்து பேசியது கணவர் எபனேசருக்கு மீண்டும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த எபனேசர் மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி அரிவாள் மற்றும் விஷம் ஆகியவற்றை வாங்கி வீட்டில் தயார் நிலையில் வைத்துள்ளார்.
வெட்டிக்கொலை
அன்று இரவு மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதை மாமனார் ஜெபசிங் தட்டி கேட்டுள்ளார். இதனால் எபனேசருக்கும், ஜெபசிங்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எபனேசர், உங்கள் வீட்டில் இருப்பதால் தான் இப்படி பேசுகிறீர்கள், நான் என்னுடைய வீட்டிற்கு மனைவி, பிள்ளைகளை அழைத்துச் செல்கிறேன் என கூறியுள்ளார். இரவானதால் காலையில் செல்லலாமே என உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்துள்ளனர்.
இதை பொருட்படுத்தாத எபனேசர் மனைவியை அழைத்து உன்னிடம் தனியாக பேச வேண்டும். இங்கு வைத்து பேசினால் சரியாக இருக்காது என வற்புறுத்தியுள்ளார். கணவரின் திட்டத்தை அறியாமல் ஜெப பிரின்ஷாவும், அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். இரவு 11.15 மணியளவில் அவர்கள் மூலச்சலில் இருந்து பரைக்கோடு கால்வாய் கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. மருதவிளை பகுதியில் சென்றதும் எபனேசர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்னர் திடீரென எபனேசர் தான் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜெப பிரின்ஷாவின் தலை, கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்திலேயே பலியானார்.
தற்கொலை முயற்சி
கண்ணிமைக்கும் நேரத்தில் மனைவியை தீர்த்துக்கட்டிய அவர் அங்கிருந்து தப்பியோடினார். தனது வீட்டின் அருகில் உள்ள ேதாட்டத்துக்கு சென்று தயாராக எடுத்து வந்த விஷத்தை அவர் குடித்துள்ளார். பின்னர் உறவினர்களுக்கு போன் செய்து மனைவியை வெட்டி கொன்று விட்டு தானும் சாவதற்கு விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு பதறிய உறவினர்கள் தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்வேல்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ஜெபபிரின்ஷாவின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தோட்டத்தில் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எபனேசரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ஜெபபிரின்ஷாவின் தந்தை ஜெபசிங் கொடுத்த புகாரின் பேரில் எபனேசர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதல் மனைவியை வெட்டிக்கொலை செய்து விட்டு கணவரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தக்கலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.