கணவரை விடுவிக்கக்கோரி கோர்ட்டில் விஷம் குடித்த மனைவி


கணவரை விடுவிக்கக்கோரி கோர்ட்டில் விஷம் குடித்த மனைவி
x

கணவரை விடுவிக்கக்கோரி கோர்ட்டில் மனைவி விஷம் குடித்தார்.

அரியலூர்

செந்துறை:

திருட்டு வழக்குகள்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இடையக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் புரட்சித்தமிழன்(வயது 27). இவர் கடந்த அக்டோபர் மாதம் 15-ந் தேதி பட்டப்பகலில் பரணம் கிராமத்தில் மாடு மேய்த்த ஒரு பெண்ணிடம் 4½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற வழக்கில், அவரை இரும்புலிக்குறிச்சி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இவர் மீது ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் ெமாத்தம் 11 திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையை ஏற்று, புரட்சித்தமிழனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதையடுத்து புரட்சித்தமிழன் சிறையில் அடைக்கப்பட்டார்.

விஷம் குடித்தார்

இந்த நிலையில் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த புரட்சித்தமிழனை செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்த இரும்புலிக்குறிச்சி போலீசார் அழைத்து வந்தனர். அவரை பார்க்க அவரது மனைவி கோர்ட்டிற்கு வந்திருந்தார். அப்போது திடீரென அவர் கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் வக்கீல்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

விடுவிக்க கோரிக்கை

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், எனக்கு 17 வயதுதான் ஆகிறது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எனக்கு பெற்றோர் இல்லை. இந்நிலையில் என்னை புரட்சித்தமிழன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு திருட்டு பழக்கம் இருப்பது எனக்கு தெரியாது. எனக்கு உள்ள ஒரே ஆதரவு எனது கணவர் மட்டுமே. எனவே அவரை விடுவிக்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே புரட்சித்தமிழன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கணவரை விடுவிக்கக்கோரி கோர்ட்டு வளாகத்தில் மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story