கணவரை இரும்பு குழாயால் அடித்துக் கொன்ற பெண்
மதுபோதையில் தகராறு செய்த கணவரை இரும்பு குழாயால் அவரது மனைவி அடித்துக் கொலை செய்தார்.
தா்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது43). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மாதம்மாள் (39). இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகனும், நாகரத்தினம் என்ற மகளும் உள்ளனர். கோவிந்தனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதுதொடர்பாக, கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்த கோவிந்தன் மனைவி மாதம்மாளிடம் தகராறு செய்துள்ளார்.
அடித்துக் கொலை
இதனால் ஆத்திரமடைந்த மாதம்மாள், அடுப்பூதும் இரும்பு குழாயால் கணவனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதம்மாளை கைது செய்தனர்.