ஆற்றில் அடித்து வரப்பட்ட பெண்ணை உயிருடன் மீட்ட தொழிலாளி


ஆற்றில் அடித்து வரப்பட்ட பெண்ணை  உயிருடன் மீட்ட தொழிலாளி
x

ஒரத்தநாடு அருகே ஆற்றில் அடித்து வரப்பட்ட பெண்ணை கூலி தொழிலாளி ஆற்றில் இறங்கி உயிருடன் மீட்டார்.

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டை அடுத்துள்ள செல்லம்பட்டி கல்லணை கால்வாய் ஆற்றாங்கரை அருகே அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் காலை வேளையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உண்டு. அதேபோன்று நேற்று முன்தினம் காலையில் இளைஞர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் ஒரு பெண் அடித்து வரப்பட்டார்.

அந்தப் பெண்ணின் கை அசைவுகள் மூலம் அவர் உயிருக்கு போராடுவதை இளைஞர்கள் கண்டனர். உடனே, அங்கிருந்த கூலித் தொழிலாளி செந்தில் (வயது 55) என்பவர் ஆற்றில் இறங்கி உயிருக்கு போராடிய அந்த பெண்ணை மீட்டு கரை சேர்த்தார். இதனைத் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணிற்கு கிராம மக்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு அவருக்கு உடுத்த மாற்று உடையும், உணவும் வழங்கினர்.

ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கிராம மக்கள்

அந்தப் பெண் பேசிய மொழி புரியாததால், அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர், ஆற்றில் எப்படி விழுந்தார் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பெண்ணை கிராம மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆற்றில் அடித்து வரப்பட்ட பெண்ணை காப்பாற்றிய கூலித்தொழிலாளி செந்தில் மற்றும் அந்த பெண்ணிற்கு உதவியவர்களை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.



Next Story