கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்... தங்க இடம் கொடுப்பதாக கூறி பாலியல் பலாத்காரம்...!
கோபத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த பெண்ணுக்கு தங்க இடம் கொடுப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி,
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண், புதுச்சேரி திப்புராயபுரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தனது சகோதரியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் ஆட்டோ ஒன்றில் ஏறிய அவர் பஸ் நிலையம் சென்றார். பஸ் நிலையத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இளம்பெண் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சாதிக் பாஷா, தினேஷ், அரவிந்தன் ஆகிய மூவரும் அந்த பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளனர். இவ்வாறு பேசிக்கொண்டே அந்த மூவரும் தங்குவதற்கு இடம் கொடுப்பதாக கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய அந்த பெண் அவர்களுடன் சென்றார். பெண்ணை அழைத்து சென்ற அவர்கள் ஒரு தனி வீட்டில் அடைத்து வைத்து இரண்டு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அங்கிருந்து ஒருவழியாக தப்பிய அந்த பெண் அருகில் இருந்த கடைக்காரரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக முதலியார் பேட்டை போலீசார், அந்த மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்த போது ஆட்டோ டிரைவரும் பாலியல் தொந்தரவு செய்ததாக அந்த பெண் கூறினார். இதன் அடிப்படையில் அந்த ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.