சுவர் இடிந்து பெண் பலி
தலைவாசல்:-
தலைவாசல் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுவர் இடிந்து பெண் பலியானார்.
சூறைக்காற்றுடன் மழை
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் தலைவாசல், சார்வாய், மணிவிழுந்தான், வடகுமரை, தென்குமரை, சார்வாய் புதூர், தேவியகுறிச்சி, சிறுவாச்சூர், ஊனத்தூர், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டு அனைத்தும் கிழிந்து சாய்ந்தன.
பெண் பலி
சாருவை கிராமத்தில் பெரிய அம்மன் கோவில் அருகில் உள்ள பழமையான ஆலமரம் சாய்ந்தன. ஆலமரம் சாய்ந்ததால் அருகில் உள்ள 6 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. அதேநேரத்தில் கிராமத்தில் பல இடங்களில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
சார்வாய் ஊராட்சி இந்திரா காலனியை சேர்ந்த ராமன் மகள் செல்வி (வயது40) என்ற பெண், அங்குள்ள கியாஸ் ஏஜென்சி அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். மழை பெய்ததால் கியாஸ் ஏஜென்சி அருகில் மழைக்கு ஒதுங்கினார். அப்போது சுவர் இடிந்து விழுந்து செல்வி பலத்த காயம் அடைந்தார். அவரது ஆடு ஒன்று சுவர் இடிபாடுகளில் சிக்கி இறந்தது. அந்த பெண்ணை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன், தலைவாசல் தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் ராதா, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் அய்யப்பன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கெங்கவல்லி
கெங்கவல்லி பகுதிகளில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையில் ஆத்தூர் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் நின்ற 2 புளியமரமும், நடுவலூர் சமத்துவபுரம் அருகில் 2 புளியமரமும் விழுந்து விட்டது.
தகவல் அறிந்த கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த மரங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.