ராட்சத அலையில் சிக்கி பெண் பலி
பள்ளம் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கிய பெண் பரிதாபமாக பலியானார்.
மேலகிருஷ்ணன்புதூர்:
பள்ளம் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கிய பெண் பரிதாபமாக பலியானார்.
கடற்கரையில் பெண் பிணம்
மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள பள்ளம் அன்னை நகர் கடற்கரை பகுதியில் நேற்று காலை ஒரு பெண் பிணம் கரை ஒதுங்கியது. இதைப்பார்த்த பொதுமக்கள் இதுபற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கடற்கரை பகுதியில் பெண் பிணமாக கிடந்ததால் இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
ராட்சத அலையில்...
விசாரணையில், பள்ளம் அன்னை நகரை சேர்ந்த அற்புதராஜ் என்பவரின் உறவினர் எனவும், அந்த பெண் கடற்கரைக்கு வந்தபோது ராட்சத அலையில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து அவரை அழைத்து வந்தனர். அவர் அந்த பெண்ணின் பிணத்தை பார்த்து விட்டு தனது அத்தை பெர்னிற்றாள்(வயது54) என்பதை உறுதி செய்தார். மேலும், தனது அத்தை பெர்னிற்றாளுக்கு சிலுவைநாயகம் என்ற ஒரு மகன் மட்டும் உள்ளார். அவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அத்தையின் கணவர் கபீரியேல் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதன்பிறகு பெர்னிற்றாள் நாகர்கோவில் பால் பண்ணை அருகில் அமைந்துள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது மருந்து எதுவும் சாப்பிடாமல் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டார். பெர்னிற்றாள் இயற்கை உபாதை கழிக்க கடற்கரைக்கு வருவது வழக்கம். அதுபோல் நேற்று காலையில் வந்தவர் அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பிவில்லை என கூறினார். இதன்மூலம் அவர் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து பெர்னிற்றாளின் பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அற்புதராஜ் கொடுத்த புகாரின் பேரில் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.