காவேரிப்பட்டணம் அருகே சில்மிஷம் செய்த தொழிலாளியை அடித்துக் கொன்ற பெண்- போலீசில் சரண்


காவேரிப்பட்டணம் அருகே சில்மிஷம் செய்த தொழிலாளியை அடித்துக் கொன்ற பெண்- போலீசில் சரண்
x
தினத்தந்தி 26 Jun 2023 1:15 AM IST (Updated: 26 Jun 2023 8:37 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அருகே சில்மிஷம் செய்த தொழிலாளியை அடித்துக்கொன்ற பெண் போலீசில் சரணடைந்தார்.

பெண்ணிடம் சில்மிஷம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் கதிரபுரம் அருகே உள்ள எம்.சவுளூரை சேர்ந்தவர் லெனின் (வயது40). தொழிலாளி. இவர் நேற்று மதுபோதையில் அதே பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வந்த 50 வயது பெண்ணின் வீட்டுக்கு சென்றார். மது போதையில் இருந்த லெனின் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் அருகில் இருந்த கட்டையை எடுத்து லெனின் தலையில் அடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த லெனினை அக்கம் பக்கத்தினர் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது லெனின் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

போலீசில் சரண்

இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று லெனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லெனின் இறந்த தகவல் அறிந்ததும் அந்த பெண் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்து நடந்த சம்பவம் குறித்து கூறினார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்தனர். சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளியை பெண் கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story