மனு அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்ததால் குடும்பத்தினர் தர்ணா போராட்டம்


மனு அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்ததால் குடும்பத்தினர் தர்ணா போராட்டம்
x

காட்பாடி மின்வாரிய அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மனுவை வாங்காமல் அலைக்கழித்ததாக கூறி அவருடைய குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

வேலூர்

மின்வாரிய ஊழியர்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் தாஜ்தின்அகமத் (வயது 55). இவர் வேலூர் சாய்நாதபுரம் மின்வாரியத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். தாஜ்தின் அகமத் கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். அவருக்கு ரிஸ்வானா மற்றும் ஷம்சாத் என 2 மனைவிகள் என்று கூறப்படுகிறது.தாஜ்தின் அகமத்தின் பணப்பலன்கள் மற்றும் கருணை அடிப்படையிலான வேலையை பெறுவதற்கு 2 மனைவிகளும் காட்பாடி காந்திநகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களிடன் மின்வாரிய அதிகாரிகள் வாரிசு உரிமைசான்று உள்ளிட்ட சில ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி கூறி உள்ளனர்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் ஷம்சாத் முறைகேடாக பணப்பலன்கள் மற்றும் வேலையை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரிஸ்வானா நேற்று மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் மனு அளிக்க குடும்பத்தினருடன் சென்றார். அப்போது அங்கிருந்த அலுவலர்கள் மனுவை உடனடியாக பெறாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. சிறிதுநேரத்தில் ரிஸ்வானா திடீரென அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் புகார் மனுவை பெறாமல் அலைக்கழித்ததை கண்டித்து ரிஸ்வானா மற்றும் குடும்பத்தினர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசில் புகார்

இதுகுறித்து தகவலறிந்த மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சாந்தி அங்கு சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர், தாஜ்தின் அகமத்துக்கு 2 மனைவிகள் உள்ளதாக ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே உடனடியாக பணப்பயன்கள் வழங்க இயலாது. வாரிசு உரிமைச்சான்று அளித்த பின்னர் பணப்பயன்கள் மற்றும் கருணை வேலை வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து ரிஸ்வானா மற்றும் அவருடைய குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் மின்வாரிய அலுவலகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story