மகனுடன் தர்ணா செய்த பெண்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மகனுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
திருச்சி, ஜூன்.7-
லால்குடி அருகே உள்ள அளுந்தலைப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜ் மனைவி சரஸ்வதி (வயது 53) தனது மகனுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் வெற்றிலை, பாக்கு, பழத்துடன் தனது மனுவை வைத்திருந்தார். இதுபற்றி அவர் கூறும் போது, எனக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்ட புள்ளம்பாடி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தேன். ஆனால் வாங்க மறுத்துவிட்டார்கள். இதனால் வீடு கட்ட முடியவில்லை. ஆளும் கட்சியினர் தலையீட்டால் எங்களை அலைக்கழிப்பு செய்கிறார்கள் என்று கூறினார். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், அவருடைய மகனை போலீஸ் ஜீப்பில் ஏற்றி, செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இதனால் சரஸ்வதி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து சென்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.