விமான பயணத்தின்போது 'முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பெண்'


விமான பயணத்தின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பெண்
x

விமான பயணத்தின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு ஒரு பெண் பயணி, வசனம் பேசி பாராட்டு தெரிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரியில் ராகுல்காந்தியின் பாத யாத்திரையை தொடங்கி வைப்பதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார்.

அப்போது தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரும் உடன் சென்றனர்.

பெண் பயணி

அதே விமானத்தில் தனியார் வங்கி ஒன்றில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வரும் கவுசல்யா (வயது 41) என்பவரும் பயணம் செய்தார். அவர் விமானத்தில் ஏறியபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதே விமானத்தில் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர், மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு அருகே சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின், 'சொல்லுங்கள். என்ன வேண்டும்' என கேட்டார்.

சிரித்தபடியே கவனித்தார்

அதற்கு கவுசல்யா, பல்வேறு அரசியல் மேடைகளில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சிகளில் தான் உரையாற்றி இருப்பதாக தெரிவித்தார். மேலும், தங்கள் முன்னிலையிலும் அதுபோன்று உரையாற்ற விரும்புவதாகவும் மு.க.ஸ்டாலினிடம் கூறினார்.

அதற்கு மு.க.ஸ்டாலின், சம்மதம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கவுசல்யா, வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஓரிரு நிமிடங்கள் இமை மூடாமல் மு.க.ஸ்டாலினை பார்த்தபடியே ஏற்ற இறக்கத்துடன் அற்புதமாக உரையாற்றினார். அவரது உரையை மு.க.ஸ்டாலின், சிரித்தபடியே கூர்ந்து கவனித்தார்.

இன்ப அதிர்ச்சி

கவுசல்யா தனது உரையை முடிக்கும் போது, 'தரணி போற்றும் அளவிற்கு தமிழ்நாட்டை வழிநடத்தி செல்லும் தமிழக முதல்-அமைச்சர் எங்கள் ஸ்டாலின்' என வசனம் போன்று பேசி மு.க.ஸ்டாலினை பாராட்டினார்.

இதைக்கேட்ட மு.க.ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி அடைந்தார். கவுசல்யாவின் பேச்சாற்றலை கண்டு வியந்து 'சூப்பர்' என பாராட்டினார்.

இந்த நிகழ்வை விமானத்தில் இருந்த சில பயணிகள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்வு குறித்து கவுசல்யா கூறும்போது, 'நான் பிளஸ்-1 படிக்கும்போதில் இருந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதிகளில் பல்வேறு மேடைகளில் உரையாற்றி உள்ளேன். தற்போது விமானத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உரையாற்றியது வாழ்க்கையில் எனக்கு மறக்கமுடியாத நாளாக அமைந்து விட்டது' என்றார்.


Next Story