கலெக்டர் முன்பு மயங்கி விழுந்த பெண்
தேனி கலெக்டர் முன்பு மனு கொடுக்க வந்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப் பகுதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (வயது 50). இவர் தான் வசிக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு மனு கொடுப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரிசையில் காத்திருந்தார். கலெக்டர் முன்பு மனுவுடன் நின்று கொண்டு இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே மாவட்ட கலெக்டர் முரளிதரன், 108 ஆம்புலன்சை அங்கு வரவழைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 108 ஆம்புலன்ஸ் கூட்டரங்கு முன்பு வந்தது. அதில் இருந்த பணியாளர்கள், பஞ்சவர்ணத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸ்சில் ஏற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ரத்த அழுத்த குறைபாடு காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.