கிணற்றில் குதித்து விட்டதாக கருதிய பெண் நிலத்தில் மயங்கி கிடந்தார்


கிணற்றில் குதித்து விட்டதாக கருதிய பெண் நிலத்தில் மயங்கி கிடந்தார்
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே கிணற்றில் குதித்து விட்டதாக கருதிய பெண் நிலத்தில் மயங்கி கிடந்தார் சிறுமி கூறிய தவறான தகவலால் பரபரப்பு

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள வெண்மணியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை(வயது 34). சென்ட்ரிங் தொழிலாளியான இவருக்கு பிரியா(வயது 30) என்ற மனைவியும், 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்,மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை துரையின் மகள் பொன்னி(10) திடீரென அப்பகுதியில் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றின் முன்பு அழுதபடி நின்றாள் அவளிடம் அப்பகுதியை சேர்ந்த சிலர் கேட்டபோது தனது தாய் பிரியா கிணற்றில் குதித்து விட்டதாக கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பிரியா கிணற்றில் குறித்து தற்கொலை செய்து விட்டதாக கருதினர். இதை அறிந்த கிராமமக்கள் அங்கு திரண்டனர். கிணறு ஆழமாக இருந்ததால் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திண்டிவனம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி பிரியாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அருகே உள்ள விவசாய நிலத்தில் நின்ற ஒருவர் பிரியா இங்கே மயங்கிய நிலையில் கிடப்பதாக கூறினார். உடனே கிராமமக்கள் அங்கு விரைந்து சென்று மயங்கிய நிலையில் கிடந்த பிரியாவின் முகத்தில் தண்ணீரை தெளித்து குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தனர். அவரிடம் தீயணைப்பு துறையினர் விஷம் குடித்தாயா? என்று கேட்டதற்கு, அவர், நான் விஷம் எதுவும் குடிக்கவில்லை. மேய்ச்சலுக்காக விவசாய நிலத்தில் மாட்டை கட்டி விட்டு வரும் வழியில் திடீரென மயக்கம் ஏற்பட்டதால், நிலத்திலேயே படுத்து விட்டேன் என்று கூலாக பதில் கூறினார். இதன் பிறகே மயக்கம் ஏற்பட்டு நிலத்தில் படுத்து கிடந்த பிரியாவை காணாமல் அவரது மகள் அருகில் உள்ள கிணற்றில் தாய் குதித்து விட்டதாக கருதி அழுது கொண்டு கிராமமக்களிடம் கூறியது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.


Related Tags :
Next Story