பெண்ணின் உடல் மீது வாகனங்கள் ஏறிச்சென்றதால் உருக்குலைந்தது
திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் கிடந்த பெண்ணின் உடல் மீது வாகனங்கள் ஏறிச்சென்றதால், அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்தது.
சிதைந்து போன உடல்
திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே தம்மனம்பட்டி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு பெண்ணின் உடல் ஒன்று நடுரோட்டில் கிடந்தது. அதன் மீது அந்த வழியாக வந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஏறிச்சென்றன.
இதில் பெண்ணின் உடல், அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து கூழ் போல் ஆகி விட்டது. அவர் அணிந்திருந்த சேலை, ஜாக்கெட் மட்டுமே இருந்தது. உடல் பாகங்கள் சிதைந்து போய் சாலையோடு, சாலையாக ஒட்டி விட்டது.
யார் அவர்?
இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அங்கு சிதைந்து கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த பெண் விபத்தில் இறந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.
கொலை செய்யப்பட்டாரா?
அதாவது அந்த பெண்ணை கொலை செய்து ஏதோ ஒரு வாகனத்தில் கொண்டு வந்து, திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் மர்ம நபர்கள் போட்டு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதலில் அந்த பெண் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் காணாமல் போன பெண்கள் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.