நுழைவு வாயிலில் இரும்பு கம்பிகளுக்கு இடையே பெண்ணின் கால் சிக்கியது
நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் இரும்பு கம்பிகளுக்கு இடையே பெண்ணின் கால் சிக்கிக்கொண்டது.
நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் இரும்பு கம்பிகளுக்கு இடையே பெண்ணின் கால் சிக்கிக்கொண்டது.
நாகை அரசு மருத்துவக்கல்லூரி
நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால் எப்போது ஆஸ்பத்திரி பரபரப்பாக காணப்படும்.
ஆஸ்பத்திரிக்குள் செல்ல 2 நுழைவு வாயில்கள் உள்ளன. இந்த நுழைவு வாயில்களில் கால்நடைகள் நுழையாதபடி அகழி அமைத்து அதன் நடுவே இரும்பு கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளன.
பெண்ணின் கால் சிக்கியது
இந்த நிலையில் காரைக்காலை சேர்ந்த உஷா ராணி என்பவர் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கம்பிகளுக்கு இடையே உஷா ராணியின் கால் சிக்கிக்கொண்டது. நீண்ட நேரம் முயற்சித்தும் அவரால் காலை எடுக்க முடியவில்லை.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவஞானம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து எந்திரத்தின் உதவியுடன் உஷா ராணியின் காலை வெளியே எடுத்தனர்.இதில் காயமடைந்த உஷாராணி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கம்பிகளுக்கு இடையே அதிக இடைவெளி உள்ளதால் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.