கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
x

கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

திருச்சி

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அடிப்படை வசதிகள், பட்டா மறுதல், உதவித்தொகைகள், ரேஷன் கார்டுகள், வீட்டுமனைப்பட்டா, நலத்திட்ட உதவிகள் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 445 பேர் மனு கொடுத்தனர்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவில், தற்போது சம்பா சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளோம். ஆனால் போதிய வேலை ஆட்கள் கிடைப்பதில்லை. எனவே பணிகளை விரைந்து மேற்கொள்ள, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இலவச வீட்டுமனை பட்டா

லால்குடி தாலுகா கீழரசூரை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்து இருந்தோம். எங்கள் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி எங்கள் கிராமத்துக்கு வந்து புல தணிக்கை செய்வார் என்றும் கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால் 2 மாதங்களுக்கு மேலாகியும் யாரும் எங்கள் கிராமத்துக்கு வரவில்லை. இதுவரை பட்டாவும் கிடைக்கவில்லை. எனவே எங்களுக்கு பட்டா விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

திருவானைக்காவல் பகுதியில் டிரங்க் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் அக்கட்சியினர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் திடீரென கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் மாணவர்கள் கொடுத்த மனுவில், திருப்பூரில் உள்ள விடுதியில் தரமற்ற உணவு சாப்பிட்டு 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மாணவ-மாணவிகள் விடுதிகளில் சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


Next Story