மீன் குட்டையை மூடும் பணி தொடங்கியது
மாணவர் சாவு எதிரொல;மீன் குட்டையை மூடும் பணி தொடங்கியது
பொறையாறு:
செம்பனார்கோவில் அருகே மீன்குட்டையில் விழுந்த மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மீன்குட்டையை மூடும் பணி தொடங்கி உள்ளது.
மாணவர் சாவு
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேலையூர் கிராமம் அய்யர் காலனியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மகன் அபினேஷ் (வயது16). செம்பனார்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த அபினேஷ் கடந்த மாதம் அந்தப் பகுதியில் உள்ள மீன் வளர்ப்பு குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவரின், பெற்றோர்கள் உறவினர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் திறந்த வெளி, குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பு இன்றி மீன் குட்டை அமைந்துள்ளதாகவும், அனுமதிக் கப்பட்ட அளவுக்கு அதிகமான ஆழத்தில் குட்டை அமைத்ததால் தான் அபினேஷ் இறந்து விட்டதாக குற்றம் சாட்டினர்.
மாணவா் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி அருகில் மாணவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்த மாணவர் அபினேஷ் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி அறிவித்தார். இது குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீன் வளர்ப்பு குட்டை உரிமையாளர் பிரியதர்ஷினியை கைது செய்தனர்.
மூடும் பணி தொடங்கியது
இந்நிலையில் சீர்காழி உதவி கலெக்டர்அர்ச்சனா மாணவர் அபினேஷ் இறந்தது எதிரொலியாக விசாரணை நடத்தி மீன் வளர்பு குட்டை அனுமதி ரத்து செய்து அதை மூட உத்தரவிட்டார். அதன்படி நேற்று மாலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிராம பொதுமக்கள் முன்னிலையில் பொக்லின் எந்திரம் மூலம் மீன் வளர்ப்பு குட்டை மூடும் பணி தொடங்கியது.