குளத்தை தூர்வாரும் பணி தொடக்கம்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் அருகே உள்ள குளத்தை தூர்வாரும் பணி தொடங்கிய நிலையில், குளத்தில் உள்ள தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது.
பாசி படர்ந்தது
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற குடவரை கோவிலாகும். இக்கோவிலின் அருகே குளம் காணப்படுகிறது. இந்த குளத்தின் அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது. இந்த 2 கோவில்களுக்கும் இந்த குளத்தில் இருந்து தான் முன்பு தீர்த்தக்குடம் எடுத்து செல்லப்பட்டு வந்தது. காலப்போக்கில் இந்த குளம் அசுத்தமடைந்தது.
மேலும் மதுப்பிரியர்கள் படித்துறையிலும், குளக்கரையிலும் அமர்ந்து மதுகுடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசிச்சென்றனர். மேலும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் குளத்தில் கொட்டப்பட்டன. இந்த குளத்தின் தண்ணீரிலும் பாசிப்படர்ந்தது. ஒரு காலத்தில் தாமரை செடி படர்ந்து காணப்பட்டது.
இதனால் தண்ணீர் மாசு அடைந்ததை போல ஆனது. குளத்தின் பாதுகாப்பு கருதி சமூகவிரோதிகள் யாரும் குளத்தின் கரையில் அமர்ந்து சமூகவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்க தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. தொடர்ந்து இந்த குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தண்ணீர் வெளியேற்றம்
இந்த நிலையில் குளத்தை தூர்வாரும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெறுகிறது. இதற்காக மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குழாயில் இருந்து தண்ணீர் அருவி போல தரையில் கொட்டி, ஆறு போல பாய்ந்தோடுகிறது. இந்த தண்ணீர் சாலையோரம் உள்ள மழைநீர்வடிகால் வழியாக சென்று அருகில் உள்ள மற்றொரு குளத்திற்கு சென்றடையும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த பணி ஓரிரு நாட்கள் நடைபெறும் எனக்கூறப்படுகிறது. அதன்பின் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெறும். இந்த நிலையில் தூர்வாரும் பணிக்காக தண்ணீர் வெளியேற்றப்படும் போது வீணாக செல்வதை கண்டு பொதுமக்கள் சிலர் வேதனை அடைந்துள்ளனர். தற்போது கோடைகாலமாக இருக்கிற நிலையில், அந்த தண்ணீரை சுத்தப்படுத்தி மாற்றுப்பயன்பாட்டிற்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் என கோரிக்கை விடுத்தனர்.