ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் செங்கலநீர் ஏரி தூர்வாரும் பணி
ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் செங்கலநீர் ஏரி தூர்வாரும் பணி நடைபெற்றது.
அறந்தாங்கி அருகே ஆயிங்குடி கிராமத்தில் செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்து பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் நீர் நிலைகளை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில், செங்கலநீர் ஏரி வடிகால் வாய்க்கால் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் அறந்தாங்கி வட்டம், ஆயிங்குடி கிராம எல்லையில் ஆரம்பமாகி 2,500 மீட்டர் நீளமுடன் மாத்தூர் ஏரியில் முடிவடைகிறது. இதன்மூலம் 88.02 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெறும். மேற்கண்ட வடிகால் வாய்க்கால் மிகவும் தூர்ந்தும், காட்டாமணக்கு செடி கொடிகள் வளர்ந்து இருப்பதால் மழைக்காலங்களில் வெள்ள நீர் விரைந்து வருவதற்கு தடை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து இவற்றை தவிர்க்கும் பொருட்டு, செங்கலநீர் வடிகால் வாய்க்காலை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.