வடமறைக்காடர் கோவில் குளத்தை தூர்வாரும் பணி
வேதாரண்யம் அருகே தோப்புத்துறை வடமறைக்காடர் கோவில் குளத்தை தூர்வாரும் பணி நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே தோப்புத்துறை வடமறைக்காடர் கோவில் குளத்தை தூர்வாரும் பணி நடந்தது.
கோவில் குளம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 100-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் மீன்பாசி குத்தகை ஆண்டு தோறும் பொது ஏலம் விடப்படுகிறது. பெரும்பாலான குளங்கள் தீர்த்தவாரி குளங்களாக உள்ளன.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட தோப்புத்துறையில் உள்ள சாந்தநாயகி அம்மன் உடனாகிய வடமறைக்காடர் கோவிலுக்கு சொந்தமான குளம் 50 சென்ட் பரப்பளவில் கோவிலுக்கு தென்புறம் உள்ளது.
புதர் சூழ்ந்தது
இந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டு புதர்கள் சூழ்ந்து காடுபோல் காட்சி அளித்தது. குளத்தை சூழ்ந்த புதர்களை அகற்றி, தூர்வார வேண்டும் என பொதுமக்கள் இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குளத்தை சூழ்ந்து காணப்பட்ட புதரில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளும் இருந்தன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்த நிலையில் கோவில் குளத்தை தூர்வாராவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்தனர்.
தூர்வாரும் பணி
இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பொக்லின் எந்திரம் மூலம் குளத்தை தூர்வாரி, சுத்தம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.