விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
சதுர்த்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தி
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள், சிவசேனா கட்சியினர் விநாயகர் சிலைகளை தயாரித்து பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். பின்னர் அவற்றை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். அதேபோல் பொதுமக்களும் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்திவிட்டு நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பது வழக்கம்.
அதன்படி விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சிவசேனா கட்சியினர், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சிலைகள் தயாரிக்கும் பணி
அதன்படி திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டி பகுதியில் சிவசேனா கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இங்கு 1 அடி முதல் 10 அடி உயரம் வரை சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அதில் சிவன்-பார்வதி மடியில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்றும், சிவபெருமானை விநாயகர் வணங்குவது போலவும், தாமரையில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்றும் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதோடு கற்பக விநாயகர், சங்கு விநாயகர், யோக விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்படுகின்றன.
இந்த சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பேப்பர் கூழ், கிழங்கு மாவு, தென்னை நார் மற்றும் இயற்கை நிறமிகள் மூலம் தயாராகி வருகிறது. சிலைகளின் உயரம், தரத்துக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.