முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணி தொடங்கியது
சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை தொடங்கியது.
ஏரல்:
சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது.
சிவகளையில் அகழாய்வு
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரும்பு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில், 3-வது கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்ற அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள், இரும்பு, வெண்கலத்தாலான பொருட்கள், சங்கு பொருட்கள், நெல் மணிகள் போன்றவை கண்டறியப்பட்டன.
இங்கு கண்டெடுக்கப்பட்ட நெல் மணிகளானது சுமார் 3,200 ஆண்டுகள் பழமையானது என உறுதி செய்யப்பட்டது.
முதுமக்கள் தாழிகளை திறந்து...
சிவகளை அகழாய்வில் கண்டறியப்பட்ட பழங்கால முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை தொடங்கியது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன், சிவகளை அகழாய்வு இயக்குனர் பிரபாகரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் முதுமக்கள் தாழிகளை திறந்து, அவற்றில் இருந்த எலும்பு துண்டுகள், மண்பாண்ட பொருட்கள் போன்றவற்றை சேகரித்தனர்.
இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறியதாவது:-
34 முதுமக்கள் தாழிகள்
சிவகளை பரும்பு பகுதியில் 10 குழிகளில் இருந்து எடுக்கப்பட்ட 34 முதுமக்கள் தாழிகளை முதல்கட்டமாக திறந்து ஆய்வு செய்கின்றோம். முதுமக்கள் தாழிகளில் உள்ள பழங்கால பொருட்களின் தொன்மையை கண்டறிவதற்காக, அவற்றை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.
அங்கு இதற்கான சிறப்பு ஆய்வுக்கூடம் உள்ளது. உயிரியல் முறையிலும், ரசாயன முறையிலும் மரபணு சோதனை செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.