விளைநிலங்களை உழுது தயார்படுத்தும் பணி மும்முரம்


விளைநிலங்களை உழுது தயார்படுத்தும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே மலை காய்கறிகள் பயிரிட விளைநிலங்களை உழுது தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே மலை காய்கறிகள் பயிரிட விளைநிலங்களை உழுது தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காய்கறி விவசாயம்

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைகாய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது. முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல்கோல், பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட மலை காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக கோத்தகிரி பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை செய்த விளைநிலங்களில் மீண்டும் விவசாயம் செய்வதற்கு, நிலத்தை உழவு செய்ய முடியாத நிலை இருந்தது.

ஆனால், கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல், வெயிலுடன் கூடிய சீதோஷ்ண காலநிலை நிலவுகிறது. இதனால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களை உழுது தயார்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். விவசாயிகள் டிராக்டர் மூலம் நிலங்களை உழுது பதப்படுத்தி வருகின்றனர். மேலும் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால் அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதால், கோழிக்கழிவு இயற்கை உரங்களை, உழவு செய்த நிலங்களில் மண்ணுடன் கலந்து விவசாயம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இயற்கை உரம்

இதுகுறித்து கோத்தகிரி ஈளாடா கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, மண்ணின் வளத்தை பாதுகாப்பதற்காக ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கை கோழிக்கழிவு உரங்களை வாங்கி விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறோம். இயற்கை உரம் பயன்படுத்தி விவசாயம் செய்தால் காய்கறி சாகுபடி வெகுவாக அதிகரிக்கிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோழிக்கழிவு உரம் வரவழைக்கப்படுகிறது.

40 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை கோழிக்கழிவு உரத்தை விளைநிலத்திற்கு கொண்ட சேர்க்க ரூ.200 செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 மூட்டை உரம் தேவைப்படுகிறது. விளைநிலத்தைத் தயார் செய்து மலை காய்கறிகளை பயிரிட உள்ளோம். மலை காய்கறிகளுக்கு தற்போது ஓரளவிற்கு போதுமான கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. எனவே, மலை காய்கறிகள் பயிரிட்டு உள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை என்றனர்.


Next Story