வன உயிரியல் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்-வனத்துறை அமைச்சர் தகவல்


வன உயிரியல் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்-வனத்துறை அமைச்சர் தகவல்
x

திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் வன உயிரியல் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

திருச்சி

திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் வன உயிரியல் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

அமைச்சர் ஆய்வு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள திருச்சி - சென்னை சாலை எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று வருகை தந்தார். அங்கு அவர் மரக்கன்றுகள் நட்டு வைத்து, அங்குள்ள யானைகளுக்கு உணவளித்து, யானைகள் பராமரிப்பு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் வன உயிரியல் பூங்கா அமைவதற்கான ஆயத்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து துறையூர் தாலுகா சோபனபுரத்தில் வனத்துறையினர் சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வன மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வரும் மத்திய நாற்றங்கால் பண்ணையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

சாம்பார் இன மான்கள்

தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் வன உயிரியல் பூங்கா அமைக்க ரூ.12 கோடியே 26 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் இருந்து உத்தரவு வந்த பின்பு அடுத்த கட்ட பணியாக நீலகிரியில் இருந்து சாம்பார் இன மான்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளது.

யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. உரிமம் இல்லாமல் யானை வளர்த்து வந்தால் அதனை கண்டறிந்து இந்த யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படும். வனத்துறை சார்பில் தமிழகம் முழுவதும்அடுத்த வருடம் 32½ கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பராமரிப்பு பணிகளை வனத்துறையினர் மூலம் கண்கானிக்கப்படும். சோபனபுரத்தில் இருந்து பச்சைமலைக்கு 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

ஆய்வின் போது, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், தலைமை வனப்பாதுகாவலர் சதீஸ், மாவட்ட வன அலுவலர் கிரண், மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்.எல்.ஏக்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.


Next Story