நீரோடைகளை சீரமைக்கும் பணி மும்முரம்
கோத்தகிரியில் நீரோடைகளை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி
கோத்தகிரியில் நீரோடைகளை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை
கோத்தகிரி பகுதி மக்களுக்கு தேயிலை விவசாயமே பிரதானமான தொழிலாக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக காய்கறி விவசாயம் இருக்கிறது. காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் மழைநீரை மட்டும் நம்பி இல்லாமல், நீரோடையில் வரும் தண்ணீரையும் நம்பியுள்ளனர்.
இதன்படி கூக்கல் தொரை பகுதி விவசாயிகள் உயிலட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீரையும், ஓடேன் ஓடையை நம்பி எரிசிபெட்டா, வ.உ.சி.நகர், ஓடேன்துறை கிராம விவசாயிகளும், காக்காசோலை ஓடையை நம்பி அப்பகுதி கிராம விவசாயிகளும், குருகுத்தி ஓடையை நம்பி குருகுத்தி, காவிலோரை, நெடுகுளா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த ஓடைகள் உரிய முறையில் தூர் வாரப்படாததால், ஓடை முழுவதும் மண் அடைந்து, புதர் செடிகள் மண்டி காணப்பட்டது. இதனால் கோடைக்காலங்களில் தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நீரோடைகளை தூர்வாரி, சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
நீரோடைகள் சீரமைப்பு
இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் நில அளவை செய்து, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரோடையை தூர்வார முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு பணிகள் தொடங்கின. இதில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, நீரோடைகள் தூர்வாரப்பட்டன.
பின்னர் ஓடைப் பராமரிப்பு திட்டத்தின் கீழ் காங்கிரீட்டாலான தடுப்புச் சுவர் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவு பெற்றால் வரும் கோடை காலத்தில் விவசாயிகளுக்கு, விவசாயம் மேற்கொள்ள தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விரைவில் முடிவடையும்
இதுகுறித்து வேளாண் பொறியியல் துறை உதவி கோட்டப் பொறியாளர் பாலன் கூறுகையில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓடைகள் தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்பு செய்யபட்டு இருந்ததால், மழைக் காலங்களில் ஓடை நீர் பெருக்கெடுத்து, அடிக்கடி தாழ்வான விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் சேதமாகி வந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து வேளாண் பொறியியல் துறை சார்பில் ஓடைகளை தூர் வார முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து நிதி பெறப்பட்டு ஓடேன் ஓடையில் 2,200 மீட்டர் நீளத்திற்கும், காக்கா சோலை ஓடையில் 1,500 மீட்டர் நீளமும், குருகுத்தி ஓடையில் 2,020 மீட்டர் நீளமும் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. மேலும் தற்போது ஓடை பராமரிப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓடையின் பக்கவாட்டில் தடுப்புச் சுவர்கள் கட்டும் பணிகள் ஒரு சில பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவ பெறும் என்று தெரிவித்தார்.