ஆற்று வாய்க்காலை அகலப்படுத்தும் பணி மும்முரம்


ஆற்று வாய்க்காலை அகலப்படுத்தும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவாலா பகுதியில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க ஆற்று வாய்க்காலை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கூடலூர்,

தேவாலா பகுதியில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க ஆற்று வாய்க்காலை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வெள்ள பாதிப்புகள்

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆறு மாதங்கள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இக்காலகட்டத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்கள் மற்றும் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. பெரும்பாலான இடங்களில் ஆற்று வாய்க்கால்கள் தூர்வாரப்படாமலும், கரையோரம் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தும் காணப்படுகிறது.

இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் சீராக செல்ல வழி இல்லாமல் ஊருக்குள் புகுவதால் பெரும் சேதம் ஏற்படுகிறது. இதனால் ஆற்று வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும். தொடர்ந்து பதிவேடுகளின் அடிப்படையில் அகலப்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதையொட்டி கூடலூர் பகுதியில் உள்ள ஆற்று வாய்க்கால்களை தூர்வாரும் பணி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

தூர்வாரும் பணி மும்முரம்

இதேபோல் தேவாலா பகுதிகளில் உற்பத்தியாகி பல கிளைகளாக ஆற்று வாய்க்கால்கள் வழியாக பாண்டியாற்றில் தண்ணீர் கலக்கிறது. இந்த வாய்க்கால்கள் புதர்கள் மண்டி காணப்படுவதால், தண்ணீர் செல்ல வழி இல்லாமல் விைளநிலங்களுக்குள் புகுந்து வந்தது. இதனால் பயிர்கள் நீரில் மூழ்குவதோடு, பெரும் சேதத்தை ஏற்படுத்தி வந்தது.

இதனால் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் நீர் வள ஆதார துறை சார்பில், தேவாலா அட்டி வழியாக பாண்டியாற்றில் கலக்கும் கிளை ஆறுகளை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேவாலா அத்திக்குன்னா பாலம் தொடங்கி தேவாலா அட்டி, அம்பலக்குள்ளி வரை 3.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீரோடையை பொக்லைன் எந்திரம் மூலம் அகலப்படுத்தி தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story